#htmlcaption1 Go UP! Pure Javascript. No jQuery. No flash. #htmlcaption2 Stay Connected

CHURCH HISTORY



வரலாறு:

சுமார் 300 ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் வட மாவட்டங்களில் கத்தோலிக்கத் திருச்சபையைச் சார்ந்த அருட்தந்தையரின் உதவியுடன்ஆந்திர மாநிலத்தின் பல பகுதிகளில் இருந்தும் கிறிஸ்தவ மக்கள் வந்து குடியேறினர். அவ்வாறு குடியேறிய கிராமங்களில் ஒன்று தான் எறையூர்.

ஆரம்பத்தில் அங்ஙனம் எறையூரில் 20 குடும்பங்கள் வந்து குடியேறின. அப்போது ஜெர்மனியில் இருந்து வந்த துறவியர் இவ்வூருக்கு அருகில் “தெரசாபுரம்” என்று தற்போது அழைக்கப்படும் “பாதிரிமேடு” என்ற கிராமத்தில்மாணவர்கள் தங்கி பயில்வதற்கான விடுதிகள் அமைத்து கல்விச் சேவை செய்து வந்தனர்.

அத்துறவியர் மூலம் அருள்வாழ்வை கண்டடைந்த ஒரு சில தமிழ் குடும்பங்கள் இயேசு கிறிஸ்துவே மெய்யான தேவன் என்பதை உணர்ந்து கிறிஸ்தவ மறையில் இணைந்ததாக கூறப்படுகிறது.

சிற்றாலயமும் அதன் வளர்ச்சியும் :


1890 ஆம் ஆண்டு எறையூர் பகுதியில் வாழ்ந்த இறைமக்கள் தங்கள் பகுதியிலேயே இறைவனுக்கு என்று ஆலயம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று விரும்பி சிற்றாலயம் ஒன்றினை உருவாக்கிஅதில் வழிபட்டு வந்தனர். இச்சிற்றாலயம் தற்போது எறையூரில் அமைந்திருக்கின்ற ஆலயத்தின் தெற்கு பக்கத்தில் அமைந்திருந்தது. 1891 ஆம் ஆண்டுக்குப் பின் எறையூர்கீழச்சேரி பங்கிலிருந்து அருகில் இருக்கும் பால்நெல்லூர் பங்கின் கிளைப் பங்காக சேர்க்கப்பட்டது. அப்போது பங்குத் தந்தையர்களாக இருந்த அருட்தந்தையர்கள் கிறிஸ்தவ மக்களிடையே இறை பக்தியை அதிகம் வளர்த்ததுடன் பங்கு மக்களுக்கென்று மிகப் பெரிய ஆன்மீக அடித்தளத்தையும் அமைத்துக் கொடுத்தனர்.

1964 ஆம் ஆண்டு வரை மக்கள் சிற்றாலயத்தில் தான் வழிபாடு நடத்தி வந்தனர். அப்போது பால்நெல்லூர் பங்குத்தந்தையாக இருந்த அருட்தந்தை ஜேக்கப் எறையூர் மக்களின் விசுவாசம் மற்றும் ஆன்மீக ஈடுபாடுகளை உணர்ந்துஅம்மக்கள் சிறந்த முறையில் வழிபாடுகளில் பங்கெடுப்பதற்கு வசதியாகவிசாலமான ஆலயம் ஒன்று கட்ட வேண்டும் என்று முடிவு செய்தார். பின் அதற்கான முயற்சி மேற்கொண்டார்.
அவரது முயற்சியின் பயனாக இப்போதுள்ள அழகிய ஆலயம் கட்டி முடிக்கப்பட்டு 1965 ஆம் ஆண்டு மார்ச் 31-ம் நாள் சென்னை மயிலை பேராயர் மேதகு டாக்டர் லூயிஸ் மத்தியாஸ் அவர்களால் அர்ச்சிக்கப்பட்டுபால்நெல்லூர் பங்கின் கிளைப் பங்காகவே தொடர்ந்து வந்தது.


 1972 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அப்போது சென்னை மயிலை உயர்மறை மாவட்டத்தின் பேராயராக இருந்த மேதகு டாக்டர் அருளப்பா அவர்களால் எறையூர்பால்நெல்லூர் பங்கிலிருந்து பிரிக்கப்பட்டு தனிப் பங்காக உதயமானது. கோவளத்தில் உதவி பங்குத்தந்தையாக இருந்த அருட்தந்தை G.M. ஜோசப் முதல் பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார்.




எறையூரில் மலர்ந்த அன்னை ஞானம்மா:-

 1822 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலத்தில் உள்ள பிரங்கிபுரம் என்ற கிராமத்தில் காலி ராயண்ணாமரியம்மா தம்பதியரின் இரண்டாவது மகளாக அவனியில் அவதரித்தவர்தான் அன்னை ஞானம்மா. பக்தி நிறைந்த அந்த தம்பதியர் அன்றாடம் தவறாமல் திருப்பலி மற்றும் இறை வழிபாடுகளில் பங்கெடுத்துக் கொண்டனர். ராயண்ணா பங்கு ஆலயத்தில் வேதியராக இறைக் கடமைகளை நிறைவேற்றி வந்தார்.

பிரங்கிபுரத்திலும் அதன் சுற்று வட்டார பகுதிகளிலும் ஆன்மீகம் மற்றும் கல்வியில் சிறந்து விளங்கும் ஓர் இளைஞரை தன் அருமை மகளுக்கு மணவாளனாக தேர்தெடுக்க வேண்டும் என்று அவருக்கு 15 வயதான போது அவரது தந்தை இறைவனை நோக்கி தனது விண்ணப்பத்தை ஏறெடுத்தார்.

அவர் விரும்பியபடி சிறந்த குணநலன்கஷீமீ நிறைந்த இன்னையா என்கிற இளைஞரை பெற்றோர் அவருக்கு மிகுந்த மன நிறைவோடு மணம் முடித்து வைத்தனர். அப்போது 'மதராஸ்என்று அழைக்கப்பட்ட சென்னையின்
 Apostolic Vicar  ஆக இருந்த ஜான் பென்னலியைச் சந்திக்க பங்குத் தந்தையோடு பயணிப்பது வழக்கம்.

1858 ஆம் ஆண்டு அங்ஙனம் பங்கு தந்தையோடு மதராசுக்குச் செல்லும் வழியில் காலரா நோய்ப் பாதிப்புக்கு உள்ளாகி காலமானார். போக்குவரத்து வசதி அதிகம் இல்லாத காரணத்தால் அவர் இறந்த இடமான ரேணுகுண்டாவிலேயே அடக்கம் செய்யப்பட்டார்.

அப்போது அவரது மனைவியும் மூன்று மகன்களும் அந்த இறுதி சடங்கில் கூட கலந்துகொள்ள இயலவில்லை. கணவனை இழந்த பின் ஞானம்மா தனது ஆன்ம வாழ்வில் மேலும் ஆழமான ஊன்றுதலை ஏற்படுத்தினார். தனது மகன்களை துறவற வாழ்விற்கென்று அர்ப்பணித்தார்.

துறவற வாழ்விலும் பயிற்சியிலும் ஈடுபட்டிருந்த தனது மகன்களை பார்ப்பதற்காக சென்னைக்கும்செங்கல்பட்டிற்கும் அடிக்கடி பயணம் மேற்கொண்டார். அப்போது ஜான் பென்னலியைச் சந்தித்து அவரது ஆசீரையும் அறிவுரைகளையும் பெறுவது வழக்கம்.


இன்னையாவின் மீது பெருமதிப்பும்மிகுந்த அன்பும் கொண்டிருந்த பேராயர் கைம்பெண்ணான ஞானம்மா தனது சிறு வயது மகன்களுடன் 20 நாட்கள் இரவுபகலாய் பயணம் செய்வதில் உள்ள சிரமங்களையும்எதிர்வரும் ஆபத்து மற்றும் பணச் செலவினையும் கருத்தில் கொண்டு அவரை சென்னையிலேயே தங்கி விடும்படி அறிவுறுத்தினார்.

பேராயரின் அறிவுரைப்படி ஞானம்மா 1859ஆம் ஆண்டு தனது இரண்டு மகன்களுடன் சென்னையில் குடியேறினார். அங்கு அந்த இரு மகன்களும் குருமடத்தில் இணைந்தனர்.

1890 ஆம் ஆண்டு வரை இறை விசுவாசத்தில் மிகுந்த நாட்டம் கொண்ட இவ்வூர் இறை மக்கள்ஞாயிறு திருப்பலியில் பங்கேற்க அப்போதைய பங்காக இருந்த கீழச்சேரி ஆலயத்திற்கு 30 கி.மீ தூரம் நடந்தே சென்று வந்தனர்.
அப்போது தான் ஞானம்மா தன் குழந்தைகளுடன் சென்னைக்கு வந்து சேர நேர்ந்தது. மொழி புரியாததன் காரணமாக அவரது உறவினர்கள் வசித்து வந்த எறையூர் கிராமத்தை வந்தடைந்தார். அங்கு எறையூர் மக்கள் அன்பும்ஆதரவும் அளித்து அவருக்கு அறுசுவை உணவையும் வழங்கி வந்தனர்.
அறுசுவை உணவை உண்டு வந்த அம் மக்கள் தங்கள் ஆன்ம தாகம் தீர்க்கும் ஆன்மீக உணவை உண்ண முடியவில்லையே என்று ஏங்கினர். அதனால் கீழச்சேரி ஆலயத்திற்கு நடந்து சென்று திருவழிபாடுகளில் பங்கெடுத்துக் கொண்டனர். அம்மக்களுடன் நடை பயணத்தில் ஞானம்மாவும் கலந்து கொள்வார்.
 திருப்பலி நிறைவுறும் போது குருவானவர் வழங்கும் ஆசீர்வாதத்தினை முந்தானையில் முடிந்து வைத்துக் கொள்வார். வீட்டிற்கு வந்ததும் அவரது உறவினர்களை அழைத்து அவர்களை முழந்தாட்படியிடச் செய்து அந்த ஆசீர்வாதங்களை அவர்களுக்கு வழங்குவார். இது அவர் இறைவன் மீது கொண்ட அளவற்ற அன்பின் வெளிப்பாடும் திருப்பலியில் பலியாகும் இறைவனுக்கு அவர் எவ்வளவு முன்னுரிமை அளித்தார் என்பதையும் எடுத்துக்காட்டுகிறது.
 தாட்டிபத்திரி ஞானம்மாள் இறைவன் மீது கொண்டிருந்த எல்லையில்லா அன்பின் வெளிப்பாடாகபுனித அன்னாள் சபை நிறுவப்பட்டது. இச்சபை நிறுவப்படுவதற்கு எறையூர் கிராமம் தான் அடித்தளமிட்டது என்கிற பெருமையை பெற்று நிற்கிறது இந்த இறை சமூகம்.


மண்ணின் மைந்தர்கள் :

 
 
 

 

 

எறையூரின் பங்குத்தந்தையர்கள் :

அருட்தந்தை  G.M. ஜோசப் ( 1971 to 1980) :

அருட்தந்தை G.M. ஜோசப் முதிர்ந்த அனுபவமும்நிறைந்த ஆற்றலும் பங்கு மக்களை ஆன்மீகத்தில் திறம்பட வழி நடத்தும் பக்குவமும் பெற்றுசாதிமத வேறுபாடின்றி பங்கு மக்கள் அனைவரும் பொருளாதாரத்தில் வளர்ச்சி அடைவதற்கு வழிவகை செய்தார். எறையூரில் பள்ளிக் கட்டடம் இல்லாததை உணர்ந்து சென்னை வட்ட மேசை எண் -1 என்ற அமைப்பின் மூலம் பள்ளி கட்டடத்தை கட்டுவித்தார். ஆன்மீக செயல்பாடுகளில் பங்கு மக்களை மிகுந்த கண்டிப்புடன் வழி நடத்தினார். அவரது பணிக்காலத்தில் சுமார் 10 குடும்பங்கள் கத்தோலிக்கத் திருச்சபையில் இணைந்தன.


அவர் அங்கு பணியாற்றிய காலகட்டத்தில் பங்குத்தந்தை தங்கும் இல்லம் இல்லை. ஆலயத்திலுள்ள பின் அறையில்தான் தங்கியிருந்தார். அவரது எளிமையான வாழ்வியல் முறைகளை கண்டுணர்ந்த பங்கு மக்கள் சிறியோர் முதல் பெரியோர் வரை தங்களது மகத்தான பங்களிப்பை வழங்கி அவருக்கு ஒரு தங்கும் இல்லத்தை அமைத்துக் கொடுத்தனர்.

மேலும்இவரது பணிக்காலத்தில் படப்பைஆரம்பாக்கம்முடிச்சூர்கொளப்பாக்கம்மணிமங்கலம்வண்டலூரை அடுத்த ஓட்டேரி வரை பல கிளைப் பங்குகள் பரவி இருந்தன.
இறை மக்கள் நடுவே இறை அழைத்தலை ஊக்குவித்தார். இவருடைய தூண்டுதல் காரணமாக ஆன்மீகத்தில் மலர்ந்தவர் அருட்தந்தை சார்லஸ் ராயா.

எறையூர் பங்கில் அதிக ஆண்டுகள் பணிபுரிந்தவர் என்கிற பெருமையுடன் பங்கு மக்களுக்கு எண்ணற்ற நன்மைகளை செய்தவர் என்கிற நிறைவுடன் பங்கு மக்களின் உள்ளங்களில் நீங்கா இடம் பெற்ற அவர் 1980 ஆம் ஆண்டு மே மாதம் பங்கு மக்களிடமிருந்து கண்ணீருடன் விடை பெற்றுக் கொண்ட அவர் மானாம்பதி கண்டிகை -க்கு மாற்றலாகிச் சென்றார். பின் பல பங்குகளில் அல்லும்பகலும் அயராமல் ஆன்மீகப் பணிகள் செய்து கடின உழைப்பு காரணமாக உடல் நல பாதிப்புக்கு உள்ளானார். அதனால்சாந்தோம் வியான்னி ஓய்வு இல்லத்தில் தங்கி இருந்த அவர் 2012 ஆம் ஆண்டு ஜுன் 12ம் நாள் காலமானார்.

அருட்தந்தை P. செபாஸ்டியன் ( 1980 to 1981 ) :


இவர் தாடி சாமியார் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். ஓராண்டு காலமே பங்குத்தந்தையாக இருந்த போதிலும் அவருடைய காலகட்டத்தில் எறையூர் மக்களின் குடி நீர் ஆதாரமாக விளங்கிய குளத்தினை செப்பனிட்டு குளக்கரையை பலப்படுத்தினார். மிகக் குறுகிய காலத்திலேயே இறை மக்களின் இதயங்களில் இடம் பிடித்த அவர் 2007 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் நாள் காலமானார்.







அருட்தந்தை C. சின்னப்பா ( 1982 to 1988 ) :

1981 ஆம் ஆண்டு கீழச்சேரியில் உதவி பங்குத்தந்தையாக இருந்த அருட்தந்தை C. சின்னப்பாஇப்பங்கின் மூன்றாவது பங்குத் தந்தையானார். இவரது பணிக்காலத்தில் பழுதடைந்திருந்த ஆலய தரையானது சீரமைக்கப்பட்டது. 1985 ஆம் ஆண்டு நீரில் அடித்துச் செல்லப்பட்ட குடிநீர் குழாய்களை மீண்டும் செப்பனிட்டு மக்களுக்கு குடிநீர் கிடைக்கச் செய்தார். சிறுவர் சிறுமியரை அடைமொழியால் அழைத்து மகிழ்விப்பதும்நகைச்சுவையுடன் பேசுவதும் இவரது தனிச்சிறப்பாகும். 1988 ஆம் ஆண்டு மாற்றலாகிச் சென்றார்.






அருட்தந்தை ராஜா விக்டோரியா ( 1988 to 1996 ) :

1989 ஆம் ஆண்டு அருட்தந்தை ராஜா விக்டோரியா நான்காவது பங்குத் தந்தையாக பொறுப்பேற்றார். பங்கிலுள்ள ஏழைஎளிய மக்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுத்தார். சிறு குழந்தைகளுக்கு நடன போட்டிகள் நடத்தி அவர்களுக்கு பரிசுகள் வழங்கி ஊக்குவிப்பார். 1996 ஆம் ஆண்டு மாற்றலாகிச் சென்றார்.

 அருட்தந்தை | . அமல்ராஜ் ( 1996 to 1998 ) :

 ஏழைஎளிய மக்கள் மீது இரக்கம் கொண்ட அவர் கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது இலவசமாக ஆடைகள் கொடுத்து மகிழ்வித்தார். 1998 ஆம் ஆண்டு மாற்றலாகிச் சென்றார். அதுவரை எறையூர் தனிப் பங்காக சிறப்புடன் செயலாற்றி வந்த நிலையில் 1997 ஆம் ஆண்டு போக்குவரத்து மற்றும் சில அடிப்படை தேவைகள் காரணமாக கிளைப் பங்காக இருந்த படப்பைக்கு எறையூர் மாற்றப்பட்டது. காலப்போக்கில் படப்பை தனி பங்காகச் செயல்பட துவங்கியது.


 அருட்தந்தை சார்லஸ் கென்னடி ( 1998 to 2002 ) :

 1998 ஆம் ஆண்டு ஜுன் மாதம் எறையூரிலிருந்து பங்கு படப்பைக்கு மாற்றப்பட்டதும் பழுதடைந்து மோசமான நிலையில் இருந்த ஆலயத்தினை செப்பனிட பேராயரிடமிருந்து ரூ. 90000 பெற்றுத் தந்தார். ஏழை எளிய மக்கள் மீது இரக்கம் கொண்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சிறுவர் சிறுமியருக்கு மறைக்கல்வி போதிப்பதன் அவசியத்தை உணர்ந்து பூந்தமல்லி குருமடத்திலிருந்து அருட்சகோதரர்களை வரவழைத்து ஆன்மீக அறநெறிகளை கற்றுக் கொடுத்தார்.



 அருட்தந்தை G.R. பவுல் ஜான் ( 2002 to 2008):

2002 ஆம் ஆண்டு 7வது பங்குத் தந்தையாக அருட்தந்தை பவுல் ஜான் பொறுப்பேற்றார். அவர் படப்பையிலிருந்து வந்து எறையூரில் திருப்பலி நிறைவேற்றி வந்தார். இவரது பணிக்காலத்தில் ஊரின் வடக்கு பகுதியில் கெபி கட்டப்பட்டது. 2008 ஆம் ஆண்டு பெருங்குடி பங்கிற்கு மாற்றலாகிச் சென்றார்.



அருட்தந்தை ஜான் கான்சஸ் CMF ( 2009 to 2011 ) 

2009 ஆம் ஆண்டு கிளாரட் சபையுடன் ஒப்படைக்கப்பட்ட எறையூரின் 8வது பங்குத்தந்தையாக பொறுப்பேற்றவர் அருட்தந்தை ஜான் கான்சஸ். இவர் இப்பங்கின் கிளாரட் சபையின் முதல் பங்குத்தந்தை என்னும் சிறப்பையும் பெற்றார். ஆன்மீக செயல்பாடுகளில் மிகுந்த அக்கறையுடன் பங்கு மக்களை வழிநடத்திய இவர் 2011 ஆம் ஆண்டு ஜுன் மாதம் மாற்றலாகிச் சென்றார்.

அருட்தந்தை அந்தோணிசாமி CMF (2011 to 2014) :
இவரது பணிக்காலத்தில் பொது மக்களின் உதவியாலும்வெளியூர் வாழ் எறையூர் இறை மக்களின் உதவியாலும் ஆலயத்துக்கு சுற்றுச் சுவர் கட்டப்பட்டது. இதன் நீளம் சுமார் 2000 அடிகள் ஆகும். ஆலயத்தைச் சுற்றிலும் அழகான மரங்களை நட்டு அற்புதமான தோட்டத்தை உருவாக்கினார். தண்ணீர் தேவைக்கு ஆழ்துளைக் கிணறு ஒன்றை உருவாக்கினார். ஆலயத்தின் பின்புறம் கழிப்பிடங்களை அமைத்த அவர் பங்குத்தந்தை தங்குவதற்கென ஓர் இல்லத்தையும் அமைத்தார். கொடி மரத்திற்கு அழகிய அடித்தளத்தையும் அமைத்தார். ஆன்மீக செயல்பாடுகளிலும் அதிகம் அக்கறை காட்டினார். சிறப்பாக அமாவாசை செபம் நடத்தினர்.





அருட்தந்தை G. லூர்து ஜெயராஜ் CMF ( 2014 to 2017 ) :

2015 ஆம் ஆண்டு இவரது வழிகாட்டுதலின்படி எறையூர் ஆலயத்தின் பொன்விழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டது. அவரது மேற்பார்வையில் பொன்விழா மலரும் சிறப்பாக தயாரிக்கப்பட்டது. மற்றும் பொன்விழாவின் நினைவாக ஆலயத்தின் முகப்பில் நினைவு வளைவும்கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்க்கு மேடையும், 50 அடி உயரம் கொண்ட புதிய கொடி மரம் நிறுவப்பட்டது. ஆலயத்தின் உள் பகுதி மற்றும் வெளிப்புறம் புனரமைக்கப்பட்டது. இவருடைய காலத்தில் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாக 50 ம் ஆண்டின் நினைவாக புனித அந்தோணியாரின் திருப்பண்டமானது இப் பங்கிற்கு வந்தடைந்தது. புனித அந்தோணியாரின் இறந்த இடத்திலிருந்து அவரது உடலிருந்து எடுக்கப்பட்டு இந்த திருப்பண்டமானது இறைமக்களின் வணக்கத்திற்காக இங்கே வைக்கப்பட்டுள்ளது.



 

 அருட்தந்தை P. சிங்கராயர் (2017 to 2019 ) :

இவர் ஆன்மீக காரியங்களில் சிறப்பாக செயல்பட்டு மக்களை அன்புடன் வழி நடத்தினார். இவருடைய காலத்தில் ஆலயத்தின் முகப்பு மற்றும் ஆலயத்தை சுற்றி இறைமக்கள் நடப்பதற்கு சிமென்ட் கற்கள் ( PAVEMENT WORK AROUND THE CHURCH ) அமைக்கப்பட்டது.


அருட்தந்தை J. பெலிக்ஸ் SDM (2019 to 2022) :

2019 ம் ஆண்டு ஜூன் மாதம் 12 வது பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார்.  பங்கு மக்களுக்கு இறைபக்தி, நற்பண்புகள், சிறுவர்களின் கல்வி மற்றும் ஒழுக்க காரியங்களில் கனம் செலுத்தி பங்கின் வளர்ச்சிக்காக உழைத்தார். இவருடைய காலத்தில் ஆலய பீடத்தில் சிறிய அளவிளான புனரமைப்பு பனிகள் மற்றும் மாற்றங்கள் செய்யப்பட்டது.




அருட்தந்தை G.B.ஐசக்  (2022 முதல் ) :

2022-ம் ஆண்டு ஜுன் மாதம் 13 வது பங்குத்தந்தையாக பொறுப்பேற்றார்.  பங்கு மக்களுக்கு இறைபக்தி, நற்பண்புகள், சிறுவர்களின் கல்வி மற்றும் ஒழுக்க காரியங்களில் கனம் செலுத்தி பங்கின் வளர்ச்சிக்காகவும் மற்றும் பாரமரிப்பு பனிகளில் கவனம் செலுத்திவருகிறார்.

No comments:

Post a Comment